தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வு என்ன?
எப்பொழுதெல்லாம் பாலியல் வன்முறை நிகழ்வுகள் பொது
வெளிச்சத்திற்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் பாலியல் வன்முறைக்
குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையும் விவாதத்திற்கு உள்ளாகிறது.
பாலியல் வன்முறைக் குற்றவாளிகளை எல்லாம் தூக்கிலிட வேண்டும்
எனவும், அவர்களின் ஆணுறுப்பை அறுத்து விட வேண்டும் எனவும்,
அவர்களை தெருவில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும் எனவும்
பல கருத்துக்கள் சமூகத்தில் முன்வைக்கப் படுகின்றன. பெரும்பாலோரால்
இக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவும் படுகின்றன. உண்மையிலேயே , மரண
தண்டனை வழங்கினால் சமூகத்தில் பாலியல் வன்முறைக் குற்றங்கள்
குறையுமா என்பதையும் , பாலியல் வன்முறைக் குற்றங்களை
குறைப்பதற்கு தீர்வு என்ன என்பதையும் இக்கட்டுரையில் விரிவாக
காண்போம்.
மரண தண்டனை அமலில் உள்ள நாடுகள்
மரண தண்டனை கொடுப்பதன் மூலம் பாலியல் வன்முறைக்
குற்றங்களைக் குறைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காண , மரண
தண்டனை ஏற்கனவே அமலில் உள்ள நாடுகளின் நிலையை ஆய்வு
செய்வோம். பாகிஸ்தானில் 2005ஆம் ஆண்டு பதிவான பாலியல் வன்புணர்வு
வழுக்குகளின் எண்ணிக்கை 338. 2017ஆம் ஆண்டு பதிவான வழுக்குகளின்
எண்ணிக்கை 3495. கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இதே நிலை
தான் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவூதி அரேபியா போன்ற நாடுகளிலும்
தொடர்கிறது. பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டு வந்தாலும், பாலியல் வன்முறை வழக்குகள் அதிகரித்த
வண்ணம் தான் உள்ளன. ஆக, மரண தண்டனை விதிப்பதால் மட்டுமே
பாலியல் வன்முறைக் குற்றங்கள் குறையாது எனத் தெரிய வருகிறது. சரி,
அப்படியென்றால் பாலியல் வன்முறைக் குற்றங்களைக் குறைக்க என்ன
தான் வழி? முதலில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் எதனால்
நிகழ்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனை
பாலியல் வன்முறைச் சம்பவங்களின் அடித்தளமே ஆணாதிக்க
சிந்தனை தான். இந்த ஆணாதிக்க சிந்தனையை ஒழிக்காமல் எதையும்
மாற்ற முடியாது.
நிர்பயா வழக்கின் குற்றவாளி ஒருவர் ஒரு பேட்டியில்
பின்வருமாறு கூறியிருக்கிறார். “ஒழுக்கமான எந்தப் பெண்ணாவது இரவு
நேரத்தில் வெளியில் வருவாளா? அந்தப் பெண் இரவு நேரத்தில் வெளியில்
சுற்றியது அவளது தவறு”. பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே
பார்க்கும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு இது. செல்போனோ, பர்சோ,
கைக்கடிகாரமோ சாலையில் கேட்பாரற்று கிடந்தால் நாம் அதை எடுத்து
கொள்வோம். ஆணாதிக்க சிந்தனைவாதிகளைப் பொறுத்த வரை பெண்களும்
அவற்றைப் போன்ற ஒரு பொருள் தான். அவள் ஆண் துணையில்லாமல்
தனியாக இருந்தால் அவளை நாம் அனுபவித்து கொள்ளலாம் என்றே
அவர்கள் நினைப்பார்கள்.
இந்த ஆணாதிக்க சிந்தனையை ஒழிக்காமல் வெறும் மரண
தண்டனை மட்டுமே கொடுப்பதால் மட்டுமே மாற்றங்கள் நிகழாது. “சரி , அப்போ
தவறு செய்பவர்களுக்கு தண்டனை வேண்டாம் என்கிறீர்களா?” என்று நீங்கள்
கேட்கலாம். இல்லை தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க
வேண்டும். மரண தண்டனை தான் வேண்டாம் என்கிறேன். மரண தண்டனை
விதிக்கப்படுமானால் பாதிக்கப்பட்டோர் கொல்லப்படவும் வாய்ப்புகள் அதிகம்.
தண்டனை கடுமையாக இருப்பதை விட , தண்டிக்கப்படுவது
உறுதி என்ற நிலையை ஏற்படுத்துவது தான் குற்றங்கள் நிகழாமல்
தடுப்பதற்கான சிறந்த வழி.
அதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடும்
அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் குற்றங்கள்
குறையும்.
குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுகிறார்களா?
ஆனால் இந்தியாவில் இந்த நிலை முற்றிலும் மாறாக உள்ளது.
இங்கு பாலியல் வன்முறையில் பாதிக்கப்படுதல் சமூக களங்கமாக
கருதப்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே அந்தப் பாதிப்பை வெளியில்
சொல்வதில்லை. அப்படியே அவர்கள் வழக்கு தொடுக்க முன் வந்தாலும்
காவல் துறையின் மோசமான உபசரிப்பாலும் , நீதிமன்றத்தின்
அலைக்கழிப்பாலும் பின் வாங்கி விடுகின்றனர். நம்மூர் காவல்
நிலையங்களில் வழக்கறிஞர் இல்லாமல் சென்றால் , எப்படி நடத்துவார்கள்
என்று நமக்கு நன்றாகவே தெரியும். மேலும் சில நேரங்களில் காவல்
துறையினரே பாதிக்கப்பட்டோருக்கும் குற்றவாளிக்கும் சமரசம் பேசி
முடிக்கின்றனர். மரண தண்டனை விதிக்கப்படுமானால் இந்த சமரசங்கள்
இன்னும் அதிகரிக்கும். ஆதிக்க சாதியினரோ, உயர் அதிகாரிகளோ,
அரசியல்வாதிகளோ குற்றமிழைத்தால் , பாதிக்கப்பட்டோர் வழக்கை
பின்வாங்குமாறு மிரட்டப்படுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி சில
வழக்குகள் நீதிமன்றம் வந்தாலும் போதிய சாட்சியங்கள் இல்லையென்று
குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.
ஆக, நூறு பாலியல் வன்முறைக் சம்பவங்கள் நடைபெற்றால்
அதில் ஐந்து முதல் பத்து சம்பவத்திற்கு தான் நீதி கிடைக்கிறது. இந்த பத்து
பேருக்கு மரண தண்டனை கொடுப்பதால், சமூகத்தில் நிகழும் பாலியல்
வன்முறைக்கு குற்றங்களைக் குறைக்க முடியாது.
என்ன செய்ய வேண்டும்
1) பள்ளிகளில் பாலின சமத்துவ கல்வியும் பாலியல் சார்ந்த
கல்வியும் போதிக்க பட வேண்டும்.
2) தங்கள் மகனோ மகளோ பாலியல் வன்முறையில்
பாதிக்கப்பட்டிருந்தால் அதை மானப்பிரச்னையாக கருதாமல்
பெற்றோர்கள் தாமாக முன் வந்து புகாரளிக்க வேண்டும். இதற்கு
அரசு முறையாக மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
3) பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க இலகுவான வழிமுறையை அரசு
ஏற்படுத்தி தர வேண்டும்.
4) மேற்கூறிய வழிகளோடு, குற்றம் புரிந்தவர்கள் அனைவருக்கும்
தண்டனை நிச்சயம் என்ற நிலையை எட்டினால், சமூகத்தில்
பாலியல் வன்முறைக் குற்றங்களை ஒரளவு குறைக்க முடியும்.
இவ்வாறுதான் பாலியல் குற்றங்களைத் தடுக்க இயலுமே அன்றி, மரண தண்டனைகளால் அல்ல!
-அருண் மார்க்ஸ்
(arun10311@gmail.com)

Comments
Post a Comment